டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
அப்போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், அங்கு பெரும் கலவரம் வெடித்தது.
இதனால், இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், கடைகள் என பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களை தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசி, தடியடி நடத்தினர்.
இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்தது.
இதனைத்தொடர்ந்து, வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர, துணை ராணுவத்தினர் களத்தில் இறங்கினர். அத்துடன், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் நேற்று காலை வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில், பலர், சிகிச்சை பலனின்றி, மருத்துவமனைகளில் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 30 ஆக உயர்ந்த நிலையில், தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, டெல்லியில் கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த பதற்றம், தற்போது சற்று தணிந்துள்ளது. ஆனால், பல இடங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், சாலைகள் யாவும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.