முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கி உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா 3 வது அலை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சற்று முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று வரும் நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த 2 வது அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், செய்யாறு - திண்டிவனம் பகுதிகளில் புதிதாக தொழில் தொடங்க எந்தெந்த நிறுவனங்கள் வந்து உள்ளன என்பது குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும், கொள்கை முடிவு எடுப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது.
அத்துடன், அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய திட்டங்களை அறிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்தும், இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும், தகவல்கள் முன்னதாக வெளியானது.
மேலும், தமிழகத்தில் கொரோனா 3 வது அலை வந்தால், அதை எப்படி சமாளிக்க வேண்டும்? என்ன மாதிரினாய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.
இவற்றுடன், சிறு துறைமுகங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான திருத்தச்சட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்படியா இந்த சட்டத்திற்குத் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்த சட்ட திருத்தம் தொடர்பாக, மத்திய அமைச்சருடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலு கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
குறிப்பாக, காவேரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், புதிய கிணறுகள் அமைப்பது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும், சற்று முன்பாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், “தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், தமிழகத்தில் கொரோனா 3 வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அரசின் கொள்கை சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும், 2021 - 22 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டதாக” தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.