உத்தரப்பிரதேசத்தில் லாரிகள் விபத்துக்குள்ளானதில் 24 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றால், நாடு முழுவதும் பொது முடக்கம் அமலிலிருந்து வருகிறது. இதனால், புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள், வேலை செய்யும் இடத்திலிருந்து, சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகவும், சைக்கிள்களிலும், கிடைக்கும் வாகனங்களிலும் ஏறி பயணப்படுகின்றனர்.
இதனிடையே, 3 வது முறையாக நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம், நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி முதல், 4 வது முறையாக பொதுமுடக்கள் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ட்ரக் மூலமாகச் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டனர்.
இவர்கள் பயணம் செய்த ட்ரக்டர், உத்தரப்பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அங்கு மற்றொரு ட்ரக்குடன் நேருக்கு நேர் மோதி பயங்கர சத்தத்துடன் விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் சிக்கி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சுமார் 20 பேர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்னதாக, இதே வாரத்தில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகிறது. அதன்படி, இதே வாரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி, 15 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மே 8 ஆம் தேதி மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.