ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உலகமே கொண்டாடிய பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று “காதலர் தினம்” வந்து சென்றது. அந்த நாள் முதல், தற்போது வரை தமிழ்நாட்டில் காதல் சார்ந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்டிக்கொண்டு நிற்கின்றன.
அந்த வகையில், வடமதுரை கவால் நிலையத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அடுத்து உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகள் 22 வயதான அனிதா என்கிற இளம் பெண், பி.காம். படித்து விட்டு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.
அதே நேரத்தில், அங்குள்ள சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றும் 23 வயதான வெற்றி வேல் என்ற இளைஞருக்கும்,
இளம் பெண் அனிதாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் நல்ல பழக்கமாக மாறிய நிலையில், இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர். காலப்போக்கில், இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது.
இப்படி, அவர்கள் இருவரும் காதலர்களாகப் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், காதலர்கள் இருவரும் கலந்து பேசி எப்படியும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று, முடிவுக்கு வந்தனர்.
அதன் படி, காதலர்களான வெற்றிவேலும், அனிதாவும் திட்டம் போட்டு தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். பின்னர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோயிலில் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த சூழ்நிலையில், இளம் பெண் அனிதாவை காணவில்லை என்று, அவரது பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண் அனிதாவை தேடி வந்தனர்.
அப்போது, போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் இருவரும், வட மதுரை காவல் நிலையத்தில் “எங்களது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்”0 என்று, தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில், இரு தரப்பு பெற்றோரும் காதல் ஜோடியை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் புதுமண ஜோடியான இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழுமாறு போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அத்துடன், இரு தரப்பினரின் பெற்றோரிடமும் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, இருவரின் பெற்றோரையும் அனுப்பி வைத்தனர்.
அதே போல், வடமதுரை அருகே உள்ள பெரிய கோட்டையை சேர்ந்தவர் 29 வயதான சரசுவதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை பட்டம் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அப்போது, வட மதுரை அடுத்து உள்ள சித்தூரை சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரியான 30 வயதான ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, இளம் பெண் சரசுவதியும், காதலன் ராஜ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி சித்தூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி இருவரும், பாதுகாப்பு கேட்டு வட மதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது, அந்த இருதரப்பு பெற்றோரையும் அழைத்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், எந்த உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, புதுமண ஜோடியின் விருப்பப்படி வாழ போலீசார் சம்மதித்தனர். இதனால், அவர்கள் இருவரும் பயம் இன்றி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இப்படியாக, வட மதுரை காவல் நிலையத்தில், ஒரே நாளில் அடுத்தடுத்து 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.