தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இதனைத்தொடர்ந்து, பரவி வரும் கொரோனா தொற்ற காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து தள்ளிக்கொண்டே சென்றது.
இதனிடையே, அரசு அலுவலங்களுக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் தமிழக அரசு விளக்கு அளித்திருந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் மையங்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், மையங்களில் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கவும், மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதன் காரணமாக, சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
மேலும், கொரோனா கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.