செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்து உள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிக வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 9276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இப்படியான சூழ்நிலையில் தான், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென்று ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரவு 10 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், அப்போது ஆக்சிஜன் கிடைக்காமல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, உயிரிழந்த நோயாளிகள் அனைவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த இறப்பு சம்பவம், அந்த மாவட்டம் முழுவதும் தீயாகப் பரவிய நிலையில், இது தொடர்பாகத் தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் சக மருத்துவர்களிடம் கலந்து பேசிவிட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருக்கிறது” என்று, குறிப்பிட்டார்.
“எனினும், எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது என்றும், உயிரிழந்த 11 பேர் குறித்து, சரியான விசாரணை நடத்தப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.
இதனிடையே, இந்த துயர சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குப் பிறகே, அங்குள்ள பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் ஆக்ஸிஜன் கொண்டுவந்து நிரப்பப்பட்டு, அதன் பிறகே அங்கு நிலைமை சீரானது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.