மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சம்பவம் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பன்னிரண்டு அணிகள் இரு குழுக்களாக விளையாடி வருகின்றன. இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதனால் ஒவ்வொரு அணியிம் முதல் இடங்களில் இடம்பிடிப்பதுடன், அரையிறுத்தி போட்டிக்கு தகுதிபெற முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணி சரியாக விளையாடாததால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று வியாழகிழமை அன்று நடந்த இலங்கை – மேற்கு இந்திய தீவு அணிகளுக்கான ஆட்டத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து, 38 வயதான மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடன், அபுதாபியில் நாளை மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகிறது. இந்தப் போட்டியே டுவைன் பிராவோவுக்கு இறுதிப் போட்டியாக இருக்கும்.
ஓய்வு குறித்து தெரிவித்துள்ள ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, "“நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன. எனினும், எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் நாட்டுக்காக, விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இது நாங்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை அல்ல, வீரர்களாகிய நாங்கள் விரும்பிய உலகக் கோப்பை அல்ல. இது கடினமான போட்டி. ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கடந்த 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதே ஆண்டில், தனது முதல் டெஸ்டில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டிகளிலும் களமிறங்கினார். தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ, மேற்கு இந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
டி20 போட்டிகளில் டெத் பவுலர் என்று வர்ணிக்கப்படும் டுவைன் பிராவோ, மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 90 டி20 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளையும், 1,245 ரன்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் வைன் பிராவோ வீழ்த்தியுள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும், லீக் போட்டிகளில் டுவைன் பிராவோ தொடர்ந்து விளையாடுவார் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள டுவைன் பிராவோ, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசப் போட்டிகளில் ஓய்வுபெற்றாலும், ஐ.பி.எல்லில் தொடர்ந்து, டுவைன் பிராவோ விளையாடுவார் என்பதால், சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல டுவைன் பிராவோ ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.