உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது, ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலகக் கோப்பையை வரலாறுகளை ஒரு முறை நாம் திரும்பி பார்த்தோம் என்றால், 50 ஓவர்களில் 7 முறையும், டி20 போட்டிகளில் 5 முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தியிருக்கின்றன.
இந்த அத்தனை போட்டிகளிலும் இந்தியாவே இதுவரை வென்று தனக்கான தனி வரலாறை இதுவரை எழுதி வந்திருக்கிறது. அதே சமயம், இந்த முறை போட்டி நடக்கவிருக்கும் துபாய் மைதானமோ கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியின் ஹோம் க்ரவுண்ட் போல காட்சி அளிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
இங்கே ஆறு டி20களில் விளையாடி அத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வென்றிருந்தது. எப்போதுமே ஐ.சி.சி தொடர்களில் சற்றே வீக்காகக் காட்சியளிக்கும் பாகிஸ்தான் அணி, இந்த முறை பலமான அணியாகவே தொடருக்குள் அடியெடுத்து வைத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.
அதன் படி, டி 20 உலக கோப்பையின் சூப்பர் 12 ஆட்டமானது, துபாயில் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்திரியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பல பரீட்சை நடத்தினர்.
இந்த போட்டியில் டாசில் வென்ற பாகிஸ்தான் அணி, எதிர்பார்த்தபடியே முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. கோலிக்கு ஏனோ டாஸ் கை கொடுக்கவில்லை.
உலக கோப்பையைவிட மிக முக்கியம் இந்த ஆட்டம் என்று, இரு நாட்டு வீரர்களுமே வெற்றிகளை எதிர்பார்த்து காத்து நிற்க, அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
ரோஹித் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க லோகேஷ் ராகுல், சூர்யகுமார் ஆகியோரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தனர். இதனால், இந்திய அணி பவர் ப்ளேவுக்குள் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தட்டு தடுமாறியது.
இதனையடுத்து, கேப்டன் கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து சற்று தூக்கிச் சென்றார்.
ரிஷப் பந்த் 2 சிக்ஸர், 2 பவுண்ட்ரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி மட்டும் சற்று பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் ஜொலித்த ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டியா போன்ற இந்திய அணியின் பல வீரர்களும் நேற்றைய போட்டியில் ஏனோ பெரிய அளவில் ஜொலிக்காமல் போனது இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்து போனது.
இதனால், இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு தட்டு தடுமாறி 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது, எந்த சிரமமும் இன்றி மிக சிறப்பாகவே தனது இன்னிஸ்சை செமயாக விளையாடினார்கள்.
அதன்படி, ஓப்பனிங் வீரர்களான கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால், இந்திய அணிக்கு கடைசி வரை ஒரு விக்கெட் கூட கிடைக்காமல் இந்திய பவுலர்கள் திணறிப்போனார்கள்.
இதனால், பாகிஸ்தான் அணி மிக எளிதாக 17.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் கூட இழப்பு இல்லாமல் 152 ரன்களை மிக எளிதாக எட்டிப்பிடித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இதில், 55 பந்துகளை சந்தித்த முகமது ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து தங்களது அசத்தியமான திறமையை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, இது வரை உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்கிற மிகப் பெரிய வரலாற்று சாதனையை, இந்த முறை பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலமாக மாற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, போட்டியில் ஜெயிக்க ஓரளவிற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும், ஏனோ இந்திய அணியில் பாகிஸ்தான் அணியை வெல்ல முடியாமல் போனது, இந்திய ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகவே மாறிப்போனது. என்றாலும், சிரித்தபடி பாகிஸ்தான் வீரர்களைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார் கேப்டன் விராட் கோலி.
இதனிடையே, உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராய் தோற்ற முதல் கேப்டன் என்கிற விமர்சனமும் புதிதாய் விராட் கோலியின் தலையில் சூடிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.