“பந்து வீசுவது தொடர்பாக எனக்கும் பிராவோவுக்கு அடிக்கடி சண்டை நடக்கும்” என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மற்றும் படிக்கல் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், சுதாரித்து பந்து வீசிய சிஎஸ்கேவின் ஜடேஜா, பிராவோ உள்ளிட்ட ஆகியோர்கள் எதிர் அணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
இதனால், முதலில் ஆடிய பெங்களூரு அணியானது, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டும் எடுத்தது. அந்த அணியில் அதிகப்படியாக படிக்கல் 70 ரன்னும், கோலி 53 ரன்னும் எடுத்திருந்தனர்.
இதனால், 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எளிதாக எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
சென்னை அணியின் சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த பெங்களூரு அணி, 200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முக்கியமான 3 விக்கெட்டுகளைச் சாய்த்த பிராவோ, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் தோனி, “பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது என்றும், ஆனால் 9 வது ஓவரில் ஆடுகளம் மெதுவான தன்மைக்கு மாறிவிட்டது” என்றும், குறிப்பிட்டார்.
“இந்த நேரத்தில் இறுக்கமாகப் பந்துவீச வேண்டியது அவசியம் என்றும், அதனால் தேவ்தத் ஒரு முனையில் ஆடிக் கொண்டிருக்கும் போது ஜடேஜா அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்” என்றும், கூறினார்.
“பிராவோ, ஹசில்வுட், ஷர்துல், தீபக் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர் என்றும், சில சூழ்நிலைகளில் எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுவார் என்பது, மனதில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “மொயின் அலியிடம், அடுத்து நீங்கள் பந்துவீசப் போகிறீர்கள் என்று நான் முன்னதாகவே அவரிடம் கூறியிருந்தேன். ஆனால், பிராவோவுக்கு அந்த வாய்ப்பை நான் கொடுத்தேன்” என்றும், தெரிவித்தார்.
“பிராவோவை பொறுத்தவரையில், அவர் நினைத்த மாதிரியே விக்கெட் எடுத்தார் என்றும், எங்கள் வீரர்கள் அனைவரும் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டனர் என்றும், அவர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றும், கூறினார்.
“அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், சார்ஜா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை என்றாலும், பிராவோ சிறப்பாகச் செயல்பட்டார்” என்றும், புகழாரம் சூட்டினார்.
“பிராவோவை, நான் சகோதரன் என்று அழைக்கிறேன் என்றும், பந்து வீசுவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் எப்போதும் சண்டை நடக்கும்” என்றும், தெரிவித்தார்.
குறிப்பாக, “அவர் பந்துகளை மெதுவாக வீசி விக்கெட் எடுப்பவர் என்றாலும், அது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பதையும், ஒரு ஓவரில் வீசும் 6 பந்துகளையும் வெவ்வேறுவிதமாக வீசும்படியும்” நான் அறிவுறுத்தினேன்” என்றும் குறிப்பிட்டார்.
“எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் பிராவோ பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்” என்றும், தோனி கூறினார்.