ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கையில் 8 விக்கெட் வைத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் 4 ரன்கள் அடிக்க முடியாமல் திணறியதால், கடைசி ஓவரில் நடந்த மகா ட்விஸ்ட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

”கடைசி ஓவரில் இப்படி ஒரு ட்வீஸ்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கையில் 8 விக்கெட்கள் இருக்க, கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இருக்கும் சூழலை, ராஜஸ்தான் பந்து வீச்சாளர் கார்த்தி தியாகியின் அட்டகாசமான பந்து வீச்சு அனைவரையும் வாயடைக்க செய்து, போட்டியின் போக்கையே மாற்றிவிட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தின் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.

இதில், ராயல்ஸ் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 54 ரன் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது. லூயிஸ் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த போது அர்ஷ்தீப் பந்து வீச்சில் அவுட்டானார்.

பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, லிவிங்ஸ்டன் 25 ரன்களுக்கு வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதனையடுத்து தான், ஜெய்ஸ்வால் - லாம்ரார் ஜோடி, சீரான வேகத்தில் ரன்களை அடித்து நொருக்கிக்கொண்டு இருந்தனர்.

பொலந்துகட்டிய ஜெய்ஸ்வால் 36 பந்துகளை எதிகர்கொண்டு 6 பவுண்டரி, 2 சிக்சர் என மொத்தம் 49 ரன்களில் குவித்து ஆட்டமிழந்தார்.

166 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் சார்பில் கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.

இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். அதன் படி, அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அசத்தினார். மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வாலும் 67 ரன்களில் கேட்ச் ஆக அடுத்து வந்த அய்டன் மார்கிராம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டி வந்தனர். இதனால், அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி வந்த நிலையில், கடைசி 2 ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது, 19 ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, கடைசி ஓவரில் வெற்றி பெற 4 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்த நிலையில், அப்போது அந்த ஓவரைஇளம் வீரர் கார்த்திக் தியாகி வீச வந்தார்.

நிக்கோலஸ் பூரன் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனால், கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5 வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அதுவும் டாட் ஆகவே, ஒரு ரன் ஓடியுள்ளனர். இதனால், ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சாதித்து காட்டினார் இளம் புயல் கார்த்திக் தியாகி.

கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுக்க முடியாமல் பரிதாபமாக பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.