2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் வென்று அசத்திய இளம் வீரர்கள் கோடிகளில் ஏலம் போன நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் இறுதியில் நடக்க உள்ள நிலையில், இந்தியாவில் ஐபிஎல் பீவர் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டு உள்ளது.
அதன்படி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில், பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி இருக்கின்றன.
முக்கியமாக, கடந்த கால ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை படைத்து நட்சத்திரங்களாக ஜொலித்த பல வீரர்களும் இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போனது ஒரு பக்கம் நடந்திருந்தாலும் இன்னொரு பக்கம் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் வென்று அசத்திய சில இளம் புயல்கள் கோடிகளில் ஏலம் போனதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது, ஜூனியர் வீரர்களில் இந்தியா இந்த ஆண்டு 5 வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஆல் ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
அதே போல், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய இளம் புயல் ராஜ்வர்தன் ஹேங்கர்கேகரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்னரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அதே நேரத்தில், ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துல் வெறும் 50 லட்சம் ரூபாய்கே விலை போனார். அவர், தனது ஐபிஎல் பயணத்தை சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல் உடன் சேர்ந்து உள்ளார்.
அது போல், மற்றொரு ஜூனியர் வீரரான சுழற்பந்து வீச்சாளர் அனீஷ்வர் கவுதமை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி எடுத்து உள்ளது.
குறிப்பாக, சச்சின் டெண்டுல்கர் மகனும், இந்திய இளம் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.