ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், வானவேடிக்கை காட்டப்போவது யார் என்பது தான், இணையத்தில் இன்றைய விவாதமாக மாறியிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 8 வது லீக் ஆட்டமான சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
சென்னை அணி, டெல்லிக்கு எதிரான தனது தனது முதல் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதில், சென்னை நிர்ணயித்த 189 ரன் இலக்கை டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அரைசதம் விளாசி, அந்த அணி வெற்றி பெற அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
அந்த போட்டியில், சென்னை அணியின் பந்து வீச்சானது மிக மோசமாக அமைந்திருந்தது. ஸ்விங் பாலுக்கு பெயர் போன தீபக் சாஹர், தனது பங்களிப்பை ஆற்ற மறந்து போனார். அவரைப் போலவே, மற்ற பவுலர்களும் சிறப்பாக பந்து வீச தவறிவிட்டனர்.
கடந்த போட்டியில் ஒரே ஆறுதலாக இருந்தது நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தது தான் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்திருந்தது.
குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி, முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனால், சென்னை அணி, தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், தனது முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் விளாசி வலுவான நிலையில் இருக்கும் பஞ்சாப் அணி உடன், சென்னை அணி, இன்று தனது 2 போட்டியில் மோதுகிறது. இதில், சென்னை அணி குறைந்தது 200 ரன்களுக்கு மேல் சேர்ப்பது கட்டாயம் என்ற நிலை உருவாகி உள்ளது.
சென்னை அணியை பொறுத்த வரையில், சுரேஷ் ரெய்னாவின் வருகை தான் மிடில் ஆர்டர் சற்றே எழுச்சி பெற்று உள்ளது. இதனால், சென்னை அணியில் தொடக்க வீரர்களும், பவுலர்களும் நல்ல தொடக்கத்தைத் தந்தால் மட்டுமே சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக ஜொலிக்கும் என்பது மட்டும் உண்மை. முக்கியமாக, இம்ரான் தாஹிர் இன்றைய போட்டியில் சேர்ப்பது குறித்து கேப்டன் தோனி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதே போல், கே.எல். ராகுல் தலையில் களம் காணும், பஞ்சாப் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. அந்த அணியில் மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், டேவிட் மாலன், ஷாருக் கான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவர்களாக அணி வகுத்து நிற்கிறார்கள். இதனால், வானவேடிக்கை காட்டும் பேட்ஸ்மேன்கள் தான் அந்த அணியில் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
அத்துடன், பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த அணியில், காயம் காரணமாக முகமது ஷமி இன்றையப் போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக, இந்த இரு அணிகளும் இது வரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இவற்றில், 14 போட்டிகளில் சென்னையும், 8 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்று உள்ளது. ஒரு ஆட்டம் மட்டும் டை ஆகியிருக்கிறது. இன்றைய போட்டியில், ரசிகர்களுக்கு வானவேடிக்கையைக் காட்டப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.