டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 7 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசு தீர்மானித்தது.

அதன் படி, டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா - ஷிகார் தவான் களம் இறங்கினர். இதில், முதல் ஓவரை ஜெயதேவ் உனத்கட் சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா - ஷிகார் தவான் ஆகிய இருவரும், இந்த போட்டியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதில், பிருத்வி ஷா 2 ரன்னிலும், ஷிகார் தவான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராஹானேவும் 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆனார். இதனால், டெல்லி அணி 37 ரன்களில் 4 விக்கெட் மட்டுமே எடுத்து தட்டு தடுமாறக்கொண்டு இருந்தது.

டெல்லி அணியில் மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப், பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் குவித்தார். ரிஷப் பந்த் வெறும் 30 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்து அசத்தினார். பின்னர், அவர் ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து களம் இறங்கிய மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை. இதனால், டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர், 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியை போலவே தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து முற்றிலும் தடுமாறிப் போனது. இதில், தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மன்னன் வோஹ்ரா 9 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 2 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரே ஒரு போர் மட்டும் அடித்து வெறும் 4 ரன்னில் அவுட்டாகி ரசிர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதே போல், அவரை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே வெறும் 2 ரன்னிலும், ரியான் பராக் 2 ரன்னிலும், ராகுல் திவாடியா 19 ரன்களும் எடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், வெறும் 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி, அப்படியே தடுமாறிப்போனது.

அதே நேரத்தில், களம் நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மில்லர், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அரை சதத்தை பதிவு செய்தார்.

அத்துடன், 43 பந்துகளில் 62 ரன்களில் எடுத்திருந்த நிலையில் டேவிட் மில்லர் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் டெல்லி அணியின் பக்கம் மீண்டும் திரும்பியது.

அப்போது தான், அடுத்ததாக கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அந்த நேரத்தில்,உனத்கட்டை ரன்அவுட் செய்யும் அருமையான வாய்ப்பை பன்ட் தவறவிட்ட நிகழ்வானது, திருப்புமுனையாக அமைந்தது.

அப்போது, கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த நேரத்தில் ரபடா 19 ஓவரை வீச வந்தார். அவரின் ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட 15 ரன்களை எடுத்து இருவரும் அசத்தினர். கிறிஸ் மோரிஸ் சிக்கர்களாகப் பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதனால், கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

இதனால், இந்த ஆட்டம் மீண்டும் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. ஆட்டத்தில் திக் திக் த்ரில்லிங்கான நிமிடங்கள் தொற்றிக்கொண்டன.

அப்போது, கடைசி ஓவரை டாம்கரண் வீச, அதன் முதல் பந்தில் 2 ரன்களை அடித்த கிறிஸ் மோரிஸ், 2 வது பந்தில் சிக்ஸராகத் தூக்கி அடித்தார்.

அதே போல், 3 வது பந்து டாட் பாலாக மாற, கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த 4 வந்திலேயே கிறிஸ் மோரிஸ் அதிரடியாக பந்தை தூக்கி அடித்து, சிக்ஸராக மாற்றினார். இதனால், 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில், ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலமாக,இந்த சீசனில் தனது முதல் வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவு செய்தது.