அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக மேலும் ஒரு அணியைச் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2020 ஆம் ஆண்டுக்கான 13 வது ஐபிஎல் தொடர் பரபரப்பாக தற்போது நடந்து முடிந்திருக்கிறது. டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முதலாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியானது, இது வரை 13 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே போல், அடுத்தாண்டு நடைபெற உள்ள 2021 ஐபிஎல் சீசன், வரும் ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதங்கள் இந்தியாவில் நடைபெறும் என்று சமீபத்தில் பிசிசிஐ கூறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு புதிதாக மேலும் ஒரு அணியை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், மிகவும் சவால் நிறைந்த ஐபிஎல் தொடரை நடத்தி முடித்திருக்கிறது பிசிசிஐ. இதனால், அடுத்து ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்பு பணிகளை பிசிசிஐ, தற்போதே தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்து ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஒரு முழுமையான ஏலத்தையும் பிசிசிஐ நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, ஐபிஎல் தொடரில் இது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என 8 அணிகள் உள்ளன. இந்த நிலையில் தான், மேலும் ஒரு அணியாக குஜராத் மாநிலத்தை மையப்படுத்தி புதிதாக 9 வதாக அணியை சேர்க்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இப்படி, புதிதாக வர உள்ள 9 வது அணியை, அதானி குழுமம் வாங்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, குஜராத் லயன்ஸ் என்ற பெயரில் அணி ஒன்று இரு ஐபிஎல் சீசனில் விளையாடியது. இந்த அணியை சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்து வழி நடத்தினார். அதனால், புதிய அணிக்கு மீண்டும் சுரேஷ் ரெய்னாவே கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாக வில்லை. அதே நேரத்தில், சுரேஷ் ரெய்னாவும் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த நிலையில், நடந்து முடிந்த இந்த சீசனில் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் அணியிலிருந்து விளையாடாமல் ஊர் திரும்பினார். இதனால், சென்னை அணியின் நிர்வாகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியதற்கு, அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.