14 ஐபிஎல் சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இந்தநிலையில் நேற்று 11 வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது.


முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதன் பின்பு களமிறங்கிய டெல்லி அணி அபாரமாக ஆடி 18.2 வது ஓவரில் அதே 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த 3 போட்டிகளில் பஞ்சாப் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக பெளலிங் சரியில்லை என்பது இருந்தாலும் முதல் 4 இடத்தில் ஆடும் அட்டக்காரர்களை தாண்டி அடுத்து களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் மேல் மிகப்பெரிய கேள்வியை கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறார். 4 ஆவதாக களம் இறக்கப்படும் பூரன் தொடர்ந்து 2 போட்டிகளிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போல் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 8 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.


இந்த தொடரின் 2 வது போட்டியில் சென்னை அணியை எதிர்க்கொண்ட பஞ்சாப் வீரர்கள் தொடர்ச்சியாக பவர் பிளே முடிவதற்குல் 4 விக்கெட்டுகளை இழந்தனர். அதற்கு அடுத்து களாமிறங்கிய தமிழக வீரரான ஷாருக் கான் விக்கெட்டுகள் விழாமல் நிதானமாக ஆடியதுடன், அதிரடியாகவும் ஆடி தன் அணிக்கு வலு சேர்த்தார். அந்த போட்டியில் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் 6 வதாக களமிறக்கப்பட்ட ஷாருக்கான் வெறும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதில் இரண்டு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.


ஏற்கனவே ஷாருக்கான் தமிழக அணிக்காக சையத் முஸ்டாக் அலி தொடரில் 5 வது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடியவர்.எனவே பஞ்சாப் அணி ரசிகர்கள் , தொடர்ந்து போட்டியில் சொதப்பலாக ஆடிவரும் நிக்கோலஸ் பூரனிற்கு பதில் ஷாருக் கானை 5 வது வீரராக பஞ்சாப் அணி இறக்கினால், நிதானமாகவும், அதிரடியாகவும் அவர் ஆடுவார் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

அணியின் பலம் குறைவதற்கு என்ன காரணம் என்பதை பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்கள் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.