டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய கேப்டன் விராட் கோலி, நடிகர் தனுஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

14வது ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நேற்று மோதியது.

இதில், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் சீரான இடைவேளியில் டெல்லி அணிக்கு விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இறுதியில் ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் ஜோடி அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் ஸ்கோரை ஒரே அடியாக உயர்த்தினர்.

ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று விளையாடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

பின்னர், 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஜோடி இந்த முறை ஆரம்பத்திலேயே பிரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, டு ப்ளஸ்ஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற, பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்டினார். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக, நோர்க்கியா 148 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய முதல் பந்தையே துளியும் பிசிறில்லாமல் ட்ரைவ் ஆடி பவுண்டரியாக்கி அடித்து அசத்தினார் உத்தப்பா. அத்துடன், பவர்ப்ளே முழுமையாக விளையாடிய உத்தப்பா, அவேஷ்கான் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 20 ரன்களை அடித்து, எதிர் அணியை அசரிடித்தார்.

உத்தப்பா அதிரடியாக 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த விக்கெட்டுகளும் விழுந்தது.

அதாவது, ஆட்டத்தில் திடீர் ட்விஸ்ட்டாக நம்பர் 4 ல் ஷர்துல் தாக்கூர் களம் கண்டார். ரன்ரேட்டை கீழே விழாமல் பார்த்து 2,3 சிக்சர்கள் அல்லது பவுண்டரிகள் அடித்துவிட்டு வருவதே ஷர்துலுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். ஆனால், ஷர்துலும் டாம் கரனின் அதே ஓவரில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகள் விழுந்தது. கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை. அதே நேரத்தில், ருத்துராஜ் நின்று சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்த நிலையில், கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் ருத்துராஜும் அவுட் ஆனார்.

அப்போது தான், கேப்டன் தோனி இன்னொரு ட்விஸ்ட்டை கொடுத்தார். ஜடேஜாவுக்கு பதில் அவரே களமிறங்கி அசத்தினார். ஆனால், இப்போது களம இறங்கியது தோனி, பழைய தோனி இல்லை.

புல் ஃபார்மில் இல்லை என ஆயிரத்தெட்டு விமர்சனங்களுக்கு மத்தியில் அவர் களமிறங்கி அவர் சந்தித்த 6 பந்துகள், தோனி யார் என்பதை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிருபித்துக்காட்டியது. “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. தோனி ரிட்டன்ஸ்.. ” என்பதை சொல்லும் விதமாக அமைந்திருந்தது.

அதாவது, கடந்த 2010-11 ஆம் ஆண்டில் பார்த்த அதே தோனியை டைம் மெஷினில் இந்த போட்டி கடத்தி கொண்டு வந்ததை போலவே காணப்பட்டார்.

அப்போது, ஆவேஷ் கான் 19 வது ஓவரில் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் மிட் விக்கெட்டில் அட்டகாசமாக சிக்சர் அடித்து அசித்தினார் தோனி.

மேலும், கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்கொயரில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து அசித்தனார். அதுவே போட்டியின் வின்னிங் ஷாட்டாக அமைந்திருந்தது.

மிக முக்கியமாக, சென்னை அணி பெற்றி பெற சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னை அணி எளிதாக வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணி, 9 வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சென்னையின் இந்த வெற்றியின் மூலமாக, ஒட்டு மொத்த ரசிகர்கள் கூட்டமும் மகிழ்ச்சியில் ஆராவாரக துள்ளிக் குறித்தது.

தோனியின் ஆட்டம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, “கிரிக்கெட்டில் என்றும் தலை சிறந்த பினிஷர் எனவும், மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்ததாகவும்” விராட் கோலி கூறியுள்ளார்.

தோனியை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசி உள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், “தோனி ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தோனி ஓய்வு பெற்றதும், கிரிக்கெட் விளையாட்டில் பார்த்த மிகச் சிறந்த பினிஷர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுவார் என்றும், நான் நினைக்கிறேன்” என்றும், புகழராம் சூட்டி உள்ளார்.

அதே போல், நடிகர் தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “7 அவ்வளவு தான், அதுதான் டிவிட்” என, தோனியின் ஜெர்ஸி எண்ணை குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

அதே போல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஒரு முறை சிங்கம் எப்போதுமே சிங்கம்” என, தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டு உள்ளார்.