#IPL2022 சீசனின் நேற்றைய போட்டியில், சென்னை அணி 97 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம், CSK வின் ப்ளே ஆப் கனவு இந்த ஆண்டு கலைந்து போனது.
#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் நடைபெறும் 59 வது லீக் போட்டியில் #CSK - #MI அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற #MI மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர்.
அப்போது, டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அதாவது, #MI மும்பை அணி வீரர் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் 2 வது பந்து #CSK வீரர் கான்வேவின் பேட்டினை தாண்டிச் சென்று அவரது பேடில் பட்டது.
அப்போது, மும்பை வீரர்கள் எல்.பி.டபுள்யூ கேட்டு ஆர்பறிக்க, நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். அப்போது, “இது அவுட் இல்லை” என, கான்வே DRS கேட்டபோது, அப்போது மின்வெட்டு ஏற்பட்டதால், DRS வசதி இல்லை என்று, நடுவர்கள் கூறினர். இதனால், களத்தில் இருந்த நடுவரின் முடிவே இறுதியானது என்பதால், வேறு வழியின்றி டெவான் கான்வே வெளியேறினார்.
பின்னர் வந்த மொயீன் அலியும், ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா ஒரே ஒரு ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தனர்.
அதே போல், பும்ரா வீசிய பந்தில் உத்தப்பாவும் எல்பிடபுள்யூ அவுட் என நடுவர் அறிவித்த நிலையில், நடுவருடன் உத்தப்பாவும் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அப்போதும் DRS வசதி இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி உத்தப்பாவும் வெளியேறினார்.
ஆனால், இந்த நேரத்தில் DRS ஒருவேளை இருந்திருந்தால், டெவான் கான்வே மற்றும் உத்தப்பா ஆகிய இருவரும் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம். இதனால், இந்த போட்டியும் #CSK அணிக்கு இவ்வளவு மோசமாக சென்றிருக்காது.
பின்னர், 4 ஓவர்கள் முடிந்தபிறகு மின்வெட்டு பிரச்சினை சீராகி, “DRS வசதி உண்டு” என்று, அறிவிக்கப்பட்டது. ஆனால், 7.3 ஓவர்கள் முடிவில் #CSK 6 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்து, முட்டி மோதி திணறிக்கொண்டு இருந்தது.
அப்போது, களத்திற்கு வந்த தோனி, கடுமையாக போராடிக்கொண்டு இருந்தார். அத்துடன், ஒருமுனையில் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் #MI மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வந்த வேகத்தில் ஒரு சில ரன்களுக்கு தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர்.
முக்கியமாக, 13.3 வது ஓவரில் 9 வது விக்கெட் வீழ்ந்தது முதல் பெரும்பாலான பந்துகளை தோனியே எதிர்கொண்டார். அப்போது மறுமுனையில் முகேஷ் சவுத்ரி, கடைசி விக்கெட்டாக இருந்தார்.
இதனால், தோனி சிங்கிள் ரன் அடிப்பதையே தவிர்த்து வந்தார். அப்போது, 16 வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்ட தோனி, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடுத்தால் தான், அடுத்த ஓவரை எதிர்கொள்ள முடியும். இதனால், அந்த கடைசி பந்தில் தோனி ஒரு சிங்கிள் ரன் எடுக்க திட்டமிட்டிருந்தார். ஒரு வேளை, “பந்து பேட்டில் படவில்லை என்றாலும், ஓடியாவது ஒரு ரன் எடுத்துவிடலாம்” என்று, சவுத்ரியிடம் கூறிவிட்டு தோனி வந்தார்.
அவர் நினைத்தபடியே, அந்த பந்து தோனியின் பேட்டில் படவில்லை. இதனால், ஏற்கனவே பேசிய படி, தோனி ஓட, எதிர் முனையில் இருந்து சவுத்திரி சரியான தொடக்கம் தராமல் லேட்டாக ஓடி வருவதற்குள், அந்த பந்தை கீப்பர் இஷான் கிஷான் பிடித்து, குறிபார்த்து ஸ்டம்பை அடிக்க, சென்னையின் கடைசி விக்கெட்டும் பறிப்போனது.
இதனால், #CSK அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. #CSK சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் #MI மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஜோடி களமிறங்கனர்.
அப்போது, இஷான் கிஷான் 6 ரன்களிலும், ரோகித் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு வந்த டேனியல் சாம்ஸ் 1 ரன்னிலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது, இந்த ஆட்டம் சென்னை அணியின் பக்கம் திரும்பியது. இதனால், #CSK வெற்றி பெறுமா?” என்றும், எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிறகு களத்திற்கு வந்த திலக் வர்மா பொறுமையாக நிலைத்து நின்று விளையாடி 34 ரன்கள் எடுத்தார்.
இதனால், #MI மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி, சென்னையை வீழ்த்தி போராடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் #CSK அணியின் மிக மோசமான பேட்டிங் காரணமாக, CSK வின் ப்ளே ஆப் கனவு அப்படியே கனவாகவே கலைந்து போனது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், #CSK இது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 8 போட்டிகளில் தோல்வி கண்டு ப்ளே ஆப் வாய்ப்பை இழுந்து உள்ளது. சென்னை அணியின் இந்த மோசமான தோல்வியைானது, சென்னை ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.