பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளதால், நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திணறிக்கொண்டு இருப்பது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள்
ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. இதனால், இந்திய அரசியலில் தற்போது அனல் பறக்கும் விவாதம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்து உள்ளது.

THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், 'இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும்" என்று, தகவல் வெளியானது.

அதாவது, இந்த மென்பொருள் வாயிலாக, பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் பெரிய சர்ச்சைக்கு வித்திருக்கிறது.

இந்த உளவு மென்பொருளால், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்படுவது தான், ஜனநாயக நாட்டில் மிகப் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன், “பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வெளியிடப்படும்” என்று, இதற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் பெகாசஸ் புராஜக்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இதனால், பல்வேறு அரசாங்களின் கண்காணிப்பு செயல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் 'பெகாசஸ்' விவகாரம் தொடர்பாக தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான அம்சங்களை பார்க்கலாம்.

அதாவது, பெகாசஸ்' எனும் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் என கருதப்படும் 5,000 பேரின் பட்டியல் கசிந்திருக்கிறது.

இதில் குறிப்பாக, “பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் இதில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய பத்திரிகையாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக” தி வயர் இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள் பெயர்கள், பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக தி வயர் தெரிவித்து உள்ளது.

முக்கியமாக, இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதனையடுத்து, “இந்த சதிக்கு பின்னால் காங்கிரஸும், சர்வதேச அமைப்புகள் சிலவும் இருப்பதாக” அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுர்ஜேவாலா, “இந்த சதிக்குப் பின்னால் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் வற்புறுத்தினார்.

மேலும், “இந்த விஷயத்தில் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவை உலக அளவில் அவமானப்படுத்தும் நோக்கில், பெசாகஸ் விவகாரத்தை சிலர் பெரிதுப்படுத்துவதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“தங்களது சதி மூலம், தடையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும், சில சர்வதேச அமைப்புகள் இந்தியா வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை” என்றும், அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்றும், காலை முதலே மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணி வரை தலைவர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். அதே போல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்தி வைக்கப்பட்டது.

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.