“ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் மீதமுள்ள ஐபிஎல் டி20 போட்டிகளை, மொத்தம் 25 நாள்களுக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா என்னும் பெருந் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதற்கு மத்தியில் தான், 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவில் நடத்தப்பட்டது.

கொரோனா பெருந் தொற்று காரணமாக, இந்த முறை போட்டி தொடங்கும் முன்பும், தொடங்கிய பிறகும் வீரர்கள் சிலருக்கும், நடுவர்கள் சிலருக்கும் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர்.

எனினும், 14 வது சீசன் ஐபிஎல் போட்டிகள் இது வரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன.

கடைசியாக கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டமானது, 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, திடீரென்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

அத்துடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அப்போது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 4 வீரர்கள் மற்றும் வீரர்கள் அல்லாத அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதால், வேறு வழியில்லாமல் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் காணொலி மூலமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற போது, அந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். அ
இதில், இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “14 வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று, தெரிவித்தார்.

இந்நிலையில், “எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பாக அதற்கான திட்டப் பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக ஐக்கிய அரபு கிரிக்கெட் சங்கத்திடமும் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

இதில், “31 போட்டிகளை மொத்தம் 25 நாள்களுக்குள் நடத்துவது” என்று, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “ஓரே நாளில் 2 போட்டிகள் என்ற வீதத்தில், 4 நாள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக” தெரிகிறது. இதற்கு அமீரக சங்கமும் சம்மதம் தெரிவித்து உள்ளது.

அதாவது, கடந்த 2020 ஐபிஎல் போட்டிகளைப் போலவே இந்த முறையும், ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருக்கும் மைதானங்களில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.

முக்கியமாக, 3 மைதானங்களிலும் 30 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கவும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், ஐபிஎல் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதி அன்று தான் தெரிய வரும் என்றும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.