“சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறோம், மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி சென்று அவற்றை நிறைவேற்றி வருகிறோம்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகம் பொங்க பேசி உள்ளார்.

திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தற்போது, திருப் புத்தூர் என்று சொல்லக் கூடிய வகையிலே இந்த ஊர் மாறி இருக்கிறது” என்று, பெருமையோடு குறிப்பிட்டார்.

அத்துடன், “கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது” என்று, நினைவுகூர்ந்த முதல்வர், “அது முழுமையாக குணமடையாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை என்றும், இப்போது உங்களைப் பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து உள்ளேன்” என்று, உற்சாகம் பொங்க பேசினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “எனக்கு மருந்து மாத்திரையை விட, மக்களை சந்திப்பது தான் எனக்கு உற்சாகம் வருகிறது” என்றும், அவர் கூறினார்.

“இங்குள்ள மக்களை சந்தித்து ஆட்சி எப்படி உள்ளது? ஏதாவது குறை உள்ளதா? என்று நான் கேட்ட போது, குறைகள் இருக்கட்டும் முதலில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஓய்வெடுங்கள்” என்று, மக்கள் என்னிடம் கூறியதை கேட்டு எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்று, சுட்டிக்காட்டி பெருமையோடு பேசினார்.

குறிப்பாக, “நமது மக்களின் சிரிப்பை பார்க்கிறேன். ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை நம்மாளும் பார்க்க முடிகிறது” என்றும், முதல்வர் பேசியதும், அங்கிருந்தவர்கள் உற்சாகம் பொங்க கை தட்டி ஆர்பறித்தனர்.

மேலும், “இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு தான் இருந்து உள்ளது என்றும், பாஜகவை தவிர அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கிறார்கள்” என்றும், சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “தமிழ்நாட்டின் திராவிட மாடல் இந்தியாவின் வெற்றிச் சூத்திரமாக அமைந்து உள்ளது என்றும், விளிம்பு நிலை மக்கள் பற்றி கவலைப்படும் அரசு திராவிட முன்னேற்ற கழகம்” என்றும், கூறினார்.

மிக முக்கியமாக, “இந்தியாவில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வித்திட்டது தமிழ்நாடு என்றும், இந்த நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையோடு பேசினார்.