சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ போலியனாது என்று செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா முக்கிய பங்கு வகிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தான் அரசியலிலிருந்து ஒதுங்க இருப்பதாகக் கூறி அனைத்திற்கும் தற்காலிகமாக சசிகலா முற்றுப்புள்ளி வைத்தார்.
அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா மீண்டும் களமாட உள்ளார் எனவும், கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் என அரசியல் வட்டாராங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும் சசிகலாவுடன் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.கள், அமைச்சர்கள் என பலர் அவருடன் தொடர்ந்து உரையாடி வருவதாக செய்திகளும் ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
சசிகலா ஆதரவாளரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சக்திவேல் ராஜன் என்பவர், தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சசிகலாவுக்கு ஆதரவாக தென் மண்டல நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசி அதன் ஆடியோவை வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்ட அ.தி.மு.க. முகமும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவுடன் பேசிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் சசிகலாவின் தலைமையை தான் விருப்புவதாகவும், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருப்பதாகவும், இது தொடர்பாக மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த ஆடியோ அதிமுகவுக்குள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சசிகலாவுக்கு தான் ஆதரவு தெரிவித்து பேசிய ஆடியோ பொய்யானது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறியதாவது:-
“அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் செல்ஃபோனை பயன்படுத்துவதே கிடையாது. ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு நான் பேசுவது போல மிமிக்கிரி செய்து விஷமிகள் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
என் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான், நான் பேசாத கருத்துக்களை என் பெயரில் வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் கட்சி தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத்தேவை இல்லை.
அந்த சூழ்நிலையும் எழவில்லை. என் குரலில் மிமிக்கிரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷமிகள் மீது கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் என்னை வைத்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சசிகலா வருகையை குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அண்மையில் அன்வர் ராஜா, சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த ஆடியோவும் அதே போல் ஒரு அனலைக் கிளப்பிய நிலையில் செல்லூர் ராஜூ தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
செல்லூர் ராஜூ மறுத்துள்ள நிலையில் சக்திவேல் ராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “செல்லூர் ராஜூ அண்ணனுக்கு இப்ப கூட தைரியம் இல்லை, நான் ஆடியோவில் பேசவில்லை. இரட்டை தலைமையில் கட்சி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க என் குரலில் யாரோ பேசி இருக்கின்றனர் என தெரிவித்திருக்கும் அண்ணன் அவர்களே, உங்கள் குரலில் தான் அடியேனோடு செல்லூர் ராஜூ பேசினார் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, குவைத் நேரப்படி காலை 11 மணி இந்திய நேரப்படி மதியம் ஒன்றரை மணிக்கு தான் உங்கள் குரலில் செல்லூர் ராஜூ பேசினார் என்பதையும் இரவு ஒன்றரை அல்ல என தாங்களிடம் பேசிய அடியேன் சக்திவேல் ராஜன் கூறிக்கொள்கிறேன்...” என்று பதிவிட்டுள்ளார்.