சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக தக்கவைக்க வேண்டும் என்று எண்ணுகிற திமுக, குறைந்தபட்சம் அவர்களுக்காவது உண்மையாக உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறது அதிமுக.


கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி. ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், ஆதிதிராவிட மக்கள் கட்சி கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கும் போடப்பட்டது, இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்றும், பிரச்சார மேடைகளில் இப்படி பேசுவது வழக்கம் என்றும், ஆனால் இளைய சமுதாயத்திற்கு இந்த மாதிரியான பேச்சு நல்லதல்ல என்று தெரிவித்தார்.


மேலும் ஈரோடு மாவட்டம் டி.என் பாளையத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த திமுக எம்.பி.அந்தியூர் செல்வராஜை மேடைக்கு கீழே அமர வைத்து இழிவுபடுத்தியது.


திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ஒன்றிணைவோம் வா பிரச்சாரத்தின் போது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தங்களை மூன்றாம் தரப்பு மக்களை நடத்துவது போல் இன்று நடத்தப்படுகிறோம். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? அல்லது அந்நியர்களா? என்று கேள்வியெழுப்பியது சர்ச்சையை உருவாக்கியது.


திமுக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான கட்சி என்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் செல்லும் இடமெல்லாம் முழக்கமிட்டாலும், உண்மையில் அவர்கள் மீது திமுக அக்கறை கொள்ளவில்லை என்பது தான் உண்மை என்கிறார்கள் அதிமுக’வினர்.