அதிமுக சார்பில் திருச்சியில் பல இடங்களில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூருவில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சசிகலா, கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தவாறே விடுவிக்கப்பட்டுள்ளார் சசிகலா.
தற்போது கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை எனவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், அவரின் உடல் நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் சிகிச்சை முடிந்து தமிழகம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ‘33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’ என்று எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட பிரநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் இரா. அண்ணாதுரை பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால், அதிமுக நிர்வாகி புலியூர் இரா. அண்ணாதுரையை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் அண்ணாதுரை நீக்கம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.