சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்று மீண்டும் தர்மயுத்தம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
“அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை தான், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
அதன்படி, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று 9 வது நாளாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
என்றாலும், அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கும் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முழுவீச்சில் பொதுக்குழு தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது, அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்து உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியை ஒப்பிடும் போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் குறைவான ஆதரவுகளே கிடைத்து உள்ளன.
குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலைபாட்டில் இருந்த பலரும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
என்றாலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது முழு வீச்சில் தீவிரமாகவே நடைபெற்று வருகின்றன.
இதனால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் மிக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆலோசனைக்கு முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில் “அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாகவும், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றும், வெளிப்படையாகவே தனது மன கசப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இதன் மூலமாக, “ஒற்றைத் தலைமை” விவகாரம், தற்போது அதிமுகவில் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
மேலும், “அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது” என ஆவடி காவல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்து உள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பொதுக்குழு கூட்டம், பொது இடத்தில் வைக்கப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது என்றும், அதனை தடுக்க காவல் துறைக்கு எந்த அதிகாரம் இல்லை” என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் தான், நாளைய தினம் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது ஏரக்குறைய உறுதியாகி உள்ளது.
இதனால், பொதுக்குழுவில் பங்கேற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கு கிட்டதட்ட 3 கட்டுப்பாடுகள் அதிரடியாக விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்று, அங்கு ஜெயலலிதா சமாதியில் மீண்டும் தர்மயுத்தம் நடத்த ஒ.பன்னீர்செல்வம் தற்போது திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, “நாளை தினம் அதிமுக பொதுக்குழு நடைபெறுமா?” என்கிற ஒரு கேள்வியும், குழப்பமும் அதிமுகவினர் மத்தியில் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.