மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 2017-ம் ஆண்டு தொடங்கி, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். போட்டியிட்ட 38 தொகுதிகளில், மொத்த வாக்கு சதவீதத்தில் 3.7% வாக்குகளை பெற்றார்.


தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ‘ சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தனது தேர்தல் பரப்புரையை மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த டார்ச் லைட் சின்னம் கொடுக்கப்பட்டது. இதனால் நடிகர் கமல்ஹாசன் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்நிலையில் எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன், தனது கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுத்தார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட்டையே சின்னமாக ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.


இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.