தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மையே சென்னை மாநகரம், மழை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும் , காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது.
கடந்த 5 நாட்களாக பெய்து வந்த கன மழையால் சென்னையின் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில், மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் வெள்ள நீரை அகற்றும் பணிகள் மோட்டார்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
பல பகுதிகளிலும் நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் போன்றவையும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தின் குடியிருப்பு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்கள் மீது பழி சுமத்த வேறு காரணம் கிடைக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் என்று முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டது என்று மத்திய அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மட்டும் 140 விருதுகளை பெற்றுள்ளது. சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொய்வடைந்துள்ளன. மொத்தம் 523 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது? அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற அம்சங்கள் தெரியவில்லை.
முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே மழைநீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. சென்னையில் 4 இடங்களில் மட்டுமே மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. கடுமையாக மக்கள் பாதித்து உள்ள நிலையில், உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து உள்ளார். ஆனால் அவருக்கு எவ்வாறு இந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை.
திறமையான அரசாங்கம் இல்லாததால்தான் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை மறைக்கத் தான் அதிமுக அரசை அவர்கள் குறை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான், கனமழை வந்த போது கூட குறைவான மணி நேரங்களில் அவற்றை அகற்ற முடிந்தது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.