“அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வர” ஈபிஎஸ் தரப்பினர் புதிய வியூகம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற ஒற்றை தலைமை விவகாரம் தான், தற்போது அதிமுகவில் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதனால், அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, இருக்கிறது.

இப்படியான ஒரு குழப்பமான சூழலுக்கு மத்தியில் தான், அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 11 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறிமாறி கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலுக்கு மத்தியில்தான், “தொண்டர்கள் புடை சூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக” முன்னதாக சசிகலா அறிவித்துள்ளது, அதிமுகவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தான், சற்று முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி வரும் 11 ஆம் தேதி நடைபெறும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார்.

என்றாலும், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பெரும்பாலன நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தற்போது தேர்தல் ஆணையத்தையுமு், நீதிமன்றத்தையும் நம்பி தங்களது தரப்பில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

ஆனாலும், இதனைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவை கூட்டி அனைத்து முடிவுகளையும் மிகவும் அதிரடியாகவே நடைமுறைப்படுத்த புதிய புதிய திட்டங்களை தீட்டி உள்ளதாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து, அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் முன்னதாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அந்த கடிதம் தலைமை கழகம் என்று பெயரிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், “அதிமுக பொதுக் குழுவில் என்னென்ன தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும், என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும், ஒட்டு மொத்தமாக 16 தீர்மானங்களை வரும் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றும் வகையில் அனைத்து விதமான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” கூறப்படுகிறது.

குறிப்பாக, அதில் அதிரடி தீர்மானமாக “அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்” குறித்து தீர்மானங்கள் கொண்டு வந்து அதனை நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, இதற்கு பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவற்றுடன், ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானமும் இந்த பொதுக்குழுவில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக முக்கியமாக, அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானமும் இதில் புதிதாக கொண்டுவரப்பட உள்ளதாகவும், இப்படியாக ஈபிஎஸ் தரப்பினர் புதிய புதிய வியூகம் அமைத்து “அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்க” ஈபிஎஸ் தரப்பில் திட்டமிட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.