துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியது.., ‘’ சசிகலா சிறையில் இருந்து வெளி வர நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அவர் வெளி வந்ததும், அவரை சுற்றி அரசியல் களம் சூழல ஆரம்பிக்கும். எடப்பாடியை அவர் முதல்வராகிவிட்டு சென்றார். ஆனால் சசிகலாவின் குடும்பத்தையே ஓரம் கட்டி விட்டு ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிகள் இணைந்து இருக்கிறது.


எடப்பாடிக்கு ஆளுமை இருக்கிறது என்றாலும் கூட சசிகலாவை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் திமுகவை எதிர்க்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் தீப்பற்றி எரியும்போது, கங்கை நீரால் தான் தீயை அணைப்பேன் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவுநீர் கிடைத்தால் அதன் மூலமும் தீயை அணைக்க முயற்சிப்போம் என்று அருண் ஷோரி சொன்னதை குறிப்பிட்டு குருமூர்த்தி பேசியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்து உள்ளார்.


அதில்,‘’ அமமுகவை நான் மன்னார்குடி மாஃபியாவாகத்தான் கருதுகிறேன். பாஜக - அதிமுககூட்டணியில், அமமுக இடம்பெற்றாலும் கூட அவர்களை நான் மாஃபியாக்களாக மட்டுமே கருதுவேன். இந்த மன்னார்குடி மாஃபியா மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால், திமுக போன்று அதிமுகவும் குடும்ப கட்சியாகிவிடும்” என்று தெரிவித்தது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ‘’ சசிகலாவை இணைப்பதும் இணைக்காமல் இருப்பதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் தான் முடிவு எடுப்பார்கள். அதிமுகவுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி யார்? அதிமுகவுக்கு குருமூர்த்தியின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை அதிமுகாவில் சேர்த்தால் மட்டும் தான் அதிமுக வெற்ற பெற முடியும் என்ற குருமூர்த்தியின் கருத்துக்கு கண்டனம். இத்தோடு குருமூர்த்தி அதிமுக விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.