ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துவிட்டு, அந்த பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அத்துடன், “அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தல் அடுத்த 4 மாதத்தில் நடைபெறும்” என்றும், அக்கட்சியின் சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டன.
அதாவது, அதிமுக சட்ட விதிகளில் அதிரடியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகே, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பதிலடி தரும் வகையில், ஏட்டிக்கு போட்டியாக, “எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுக வில் இருந்து நீக்குகிறேன்” ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இதனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் காலையில் கடும் மோதல் போக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதிக்கொண்டனர்.
அதன்படி, சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்ததால், அந்த பகுதியே கலவர பூமியாக காட்சி அளித்தது.
அந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் அதிமுகவினர் அடித்து நொறுக்கி முற்றிலுமாக சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், ஓபன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த சூழலில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வருகை தந்தனர்.
அப்போது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டத காரணத்தால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.
அப்போது, முதல் அதிரடியாக சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றி அதிரடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகவே அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, அதிமுக அலுவலகம் அருகே சட்ட விரோதமாக யாரும் கூடக் கூடாது என்றும், அதிரடியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்தே, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வெளியேறினார்கள்.
அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும், சென்னை வருவாய்துறை அதிகாரிகளால் அதிரடியாக பூட்டப்பட்டது.
குறிப்பாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இங்கு மீண்டும் மோதிக் கொள்ளலாம் என்பதால், அந்த அதிமுக அலுவலகத்துக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
இதனால், அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக அமர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
மேலும், கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகு, சுமூக முடிவு ஏற்படும் நிலையில், சீல் அகற்றப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, சக அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக, இன்று காலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு சற்று முன்னதாக, ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்துக்கொண்டு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வான அடுத்த சில மணி நேரத்திலேயே, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.