அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், “கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் அடுத்த 4 மாதத்தில் நடைபெறும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக் குழு இன்றைய தினம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
இது தொடர்பாக #EPS - #OPS என இரு தரப்பினரும், நீதிமன்றத்தை நாடிய நிலையில், “சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை நடத்திக்கொள்ள” சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அதிமுக பொதுக் குழு கூட்டம் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, காலையில் முதல் நிகழ்வாக அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் மொத்தமாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, “அதிமுகவில், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை உருவாக” இந்த செயற்குழுவில் புதியதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, “அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து” இந்த செயற்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்து, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக் குழுவில், “அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது.
அதாவது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கட்சியின் தொண்டர்கள் முன்பு வாசித்து காட்டினார்.
அதன்படி, “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச் செயலாளர் என்று விதி திருத்தம் செய்யப்படுகிறது என்றும், அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்று முதல் நீக்கப்படுகிறது” என்றும், அதிரடியாக அறிவித்தார்.
குறிப்பாக, “அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக” அப்போது அறிவித்தார்.
முக்கியமாக, “அடுத்த 4 மாதங்களில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்றும், இன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.