தமிழகத்தில் நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம். அ.தி.மு.க. அரசு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வமாக ஆக்கியது. ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான் என்று திருவையாறு தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


மேலும் அவர் கூறியது, ‘’ ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் பொன் விளையும் பூமியான டெல்டா விளை நிலங்கள் எல்லாம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இருந்த மக்களின் அச்சத்தை நீக்கியது அதிமுக அரசு. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வமாக ஆக்கியது.


மேலும் காவிரி நீர் பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சட்டபோராட்டம் நடத்தினார். அந்த வேளையில் துரதி‌‌ருஷ்டவசமாக அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் அ.தி.மு.க. அரசு அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக, விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டபோராட்டத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றது எனது தலைமையிலான அரசு.


நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுடைய துன்பங்கள், துயரங்கள், க‌‌ஷ்டங்களை உணர்ந்த காரணத்தினால் அவர்களை அச்சத்தில் இருந்து, துயரத்தில் இருந்து மீட்டெடுக்க சட்டத்தின் வாயிலாக சட்டப்பாதுகாப்பு கொடுத்து இன்றைக்கு டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உங்களுக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறேன்.


விவசாயிகள் எவ்வளவு க‌‌ஷ்டப்படுகிறார்கள், எவ்வளவு துன்பப்படுகிறார்கள், எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பது ஒரு விவசாயியான எனக்குத்தான் நன்கு தெரியும். இந்த க‌‌ஷ்டத்தில் இருந்து விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை கொண்டு வந்தால்தான் விவசாயிகளை க‌‌ஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும் என இத்தனை திட்டங்களை செய்து இருக்கிறேன். ” என்று பேசினார்.