இளம் பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஆன இளைஞர் ஒருவர் “அக்கா” என்று அழைத்து 4 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் புஷ்ப் விகார் பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர், அந்த பகுதியில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
பணியின் போது இடையிடையே அந்த இளம் பெண், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக ஆக்டிவாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அந்த இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக லூசி ஹேரி என்ற ஆண் நண்பர் ஒருவர் பழக்கமாகி உள்ளார்.
இந்த பழக்கத்தின் போது, குறிப்பிட்ட அந்த ஆண் நண்பர், சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணை அக்கா என்று அழைத்தே பேசி வந்துள்ளார்.
அத்துடன், “தான் ஒரு இங்கிலாந்து குடிமகன்” என, அந்த அழகுகலை நிபுணரான இளம் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறான்.
இதனையடுத்து, அவர்கள் இருவரும் அக்கா - தம்பி உறவில் இன்ஸ்டாகிராமிலேயே பழகி வந்து உள்ளனர். இப்படியாக, இவர்களது பாசம் நாளுக்கு நாள் இருவருக்கும் இடையிலான உறவில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து உள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இன்ஸ்டாகிராம் இளைஞன், அந்த பெண் அழகுகலை நிபுணருக்கு வெளிநாட்டுப் பணம் அடங்கிய பெட்டி ஒன்றைப் பரிசாக கொடுப்பதாகக் கூறி இருக்கிறார்.
ஆனால், இதற்கு அடுத்தடுத்த நாட்களில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து சென்ற அழைப்பில், பணப்பெட்டி வந்து விட்டதாகவும் உரிய கட்டணத்தைச் செலுத்தி பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது என்றும், அந்த பெண்ணிடம் அந்த இளைஞன் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த இளம் பெண், சுங்கவரி கட்டணம், வெளிநாட்டு பணப்பரிமாற்றத்துக்கான கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம் மொத்தம் 4 லட்சம் ரூபாய்
பணத்தை, அந்த நபர் அளித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, மேலும் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்த இளம் பெண்
உணர்ந்திருக்கிறாள்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணிடம் நடந்தவற்றையெல்லாம் முதலில் கேட்டு தெரிந்துகொண்டனர். அதன் பின்னர், குறிப்பிட்ட
வங்கி கணக்கு மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவற்றைக் கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த வழக்கு குறித்து பேசிய டெல்லி தெற்கு டிசிபி அதுல் தாக்கூர், “சம்மந்தப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணையைத் தொடங்கினோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “வங்கி கணக்கு நாகாலந்து மாநிலம் திமாபூர் பகுதியைச் சேர்ந்தது என்று, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும், அங்கிருக்கும் காவல் துறையினருக்கு வழக்கு விவரங்களைத் தெரிவித்துள்ளோம்” என்றும், அவர் கூறினார்.
“ஆனால், அந்த வங்கியில் கொடுக்கப்பட்ட தகவலும் பொய் என தற்போது தெரிய வந்துள்ளது என்றும், அதன் பிறகு இன்ஸ்டாகிராமுக்கு அந்த போலி கணக்குகள் குறித்து நோட்டீஸ் அனுப்பினோம்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாது, “டெக்னிக்கல் உதவியையும் நாடி தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி ஜானகிபூரியை சேர்ந்த அமர்ஜீத் யாதவ் என்ற இளைஞர்
தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்” என்றும், அவர் தெரிவித்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “இந்த நபர், இந்த கொரோனா காலத்தில் 6 மாதங்கள் சிம்கார்டு விற்பனை செய்யும் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார் என்றும், அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் ஏக்னே என்பவருடன் ஏற்பட்ட தொடர்பில் இருவரும் இணைந்து இத்தகைய மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்” என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி வழக்கில், வெளிநாட்டைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருவதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றும், போலீசார் அதிகாரி தெரிவித்தார்.