குஜராத்தில் கணவருக்கு விஷம் கொடுத்தும் சாகாததால், ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் தலைநகர் காந்தி நகரில் தான், நெஞ்சைப் பதை பதைக்கச் செய்யும் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரைச் சேர்ந்த வக்ஜி படேல், அதே பகுதியைச் சேர்ந்த உமியா படேல் என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன புதிதில், இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கிய நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே, இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி உள்ளது.

பெரும்பாலும் எல்லா தம்பதிகளுக்கும் வரும் ஈகோ பிரச்சனை தான், இந்த தம்பதியரின் வாழ்க்கையிலும் எட்டிப் பார்த்துள்ளது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே வந்துள்ளனர். இதனால், ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது. ஆனாலும், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

நாளாக நாளாகக் கணவன் - மனைவி இடையே பெரிய அளவில் சண்டை வந்ததால், வீட்டை விட்டு வெளியேறிய மனைவி உமியா படேல், தன் கிராமத்தில் உள்ள பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினார். எனினும், எப்போதாவது ஒரு முறை கணவனை வந்து பார்த்துவிட்டு, பின்னர் அம்மா வீட்டிற்கே சென்று விடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் தொல்லைகளை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி உமியா படேல், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, தன் அம்மா வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு வந்த உமியா படேல், அன்றே கணவருக்குச் சமைத்த உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

அந்த உணவைச் சாப்பிட்ட கணவருக்கு எதுவும் ஆக வில்லை என்று தெரிகிறது. இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த மனைவி உமியா படேல், கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது, கத்தியால் குத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்த உமியா படேலின் தந்தை, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த வக்ஜி படேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவனைக் கொலை செய்த உமியா படேலையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் உமியா படேலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “என் கணவரை நான் கத்தியால் குத்துவதற்கு முன்பு அவர் விஷம் குடித்தார்” என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பாத போலீசார், அவரிடம் இன்னும் தீவிரமாக விசாரித்துள்ளனர்.

அப்போது, “கணவர் சாப்பிடும் உணவில் விஷம் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்டும் அவர் சாகாததால், அதன் பிறகே கோபப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்தேன்” என்றும், உமியா படேல் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், கணவனைக் கொலை செய்தது தொடர்பாக, வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும், இந்த கொலையின் பின்னணியில் உமியா படேலின் ஆண் நண்பர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவருக்கு விஷம் கொடுத்தும் சாகாததால், ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம், குஜராத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.