நாங்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கொடுக்கிறோம் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் ஃப்ரூக்ஹாபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத் நாங்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கொடுகிறோம். ஏழைகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கிறோம். சிறந்த அரசு இருந்தால் இது தான் நடக்கும் என தெரிவித்தார். மேலும் ஒருவேளை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள் நலத்திட்டபணிகளுக்கான பணம் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு சென்றிருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.