வரதட்சணை கொடுமையால் கேரளவை சேர்ந்த விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, “அந்த பெண்ணின் கணவனே குற்றவாளி” என்று, கேரளா கொல்லம் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தில் சமீபகாலமாக வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் புதிதாகத் திருமணம் ஆகும் இளம் பெண்கள் பலரும் வரிசையாகத் தற்கொலை செய்துகொள்வதும், அல்லது இயற்கை விதிகளுக்கு மாறாக அவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கேரளாவை சேர்ந்த விஸ்மயா எனும் இளம் பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி, நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றி, அந்த மாநில நிதிமன்றம் தற்போது அறிவித்து உள்ளது.
அதாவது, கேரள மாநிலத்தில் கொல்லம் கைத்தொடு பகுதியைச் சேர்ந்த விக்ரமன் நாயரின் மகளான 22 வயது விஸ்மயா என்ற பெண், ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார்.
இப்படியான சூழலில் தான், சஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண்குமார் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முனபு விஸ்மயாவிற்கு திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு விஸ்மயாவின் தந்தை விக்ரமன் நாயர், 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலமும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காரும் கிரன் குமாருக்கு வழங்கி இருந்தார்.
இதனையடுத்து, வரதட்சணையாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்கவில்லை என்றும், இதனால் அந்த காருக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கும்படி கிரண்குமார் கேட்டு உள்ளார்.
இதற்கு அந்த பெண் விவிஸ்மயாவின் வீட்டினர் மறுப்பு தெரிவித்ததால், விஷ்ணுகுமார் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன், விஸ்மயாவை தகாத வார்த்தைகளால் பேசி, பயங்கரமாக அடித்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் மோசமாக துன்புறுத்தி வந்தார் என்றும் கூறப்பட்டது.
இறுதியாக, இந்த வரதட்சணை கொடுமையின் கோரப் பசிக்கு விஸ்மயா பலியானார். விஸ்மயாவை அடித்து துன்புறுத்திய புகைப்படங்களை தனது வீட்டாருக்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவித்த விஸ்மயா மிகுந்த மன வேதனையில், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், செய்திகள் வெளியானது.
குறிப்பாக, விஸ்மயா என்ற இளம்பெண் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.
கேரளாவையே உலுக்கிய இந்த வரதட்சணை கொடுமை சம்பவத்தை அடுத்து, கிரண் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அரசு பணியில் இருந்து அம்மாநில அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.
அத்துடன், “விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம்” என்று, விஸ்மயா பெற்றோர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பாக 42 சட்சியங்களிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், 108 ஆவணங்கள், சில தொலைப்பேசி அழைப்பு பதிவுகளையும் போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தன்ர.
இந்த வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், “விஸ்மயா மரணத்தில், அவரது கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி” என்று, அதிரடியாக சற்று முன்பு அறிவித்தது.
முக்கியமாக, “குற்றவாளியின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்” என்றும், நீதிபதி சுஜித் அதிரடியாக கூறியுள்ளார்.
இதனிடையே, “என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஓர் உதவியாக இருக்கட்டும்” என்றும், பாதிக்கப்பட்ட இளம் பெண் விஸ்மயாவின் தாய் ஸஜிதா கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில், அவரது கணவர் தான் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள செய்தி, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.