5 பெண்களை திருமணம் செய்த ஏமாற்றிய போலி சாமியார் ஒருவர், 6 வது கல்யாணத்திற்கு ரெடியான நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் போலி சாமியார் ஒருவர் 5 பெண்களை திருமணம் செய்த ஏமாற்றியிருக்கிறார்.
உத்தரப் பிரதேம் ஷாஜகான்பூரில் “பாபா” என்று, தன்னை தானே கூறிக்கொண்டு திரிந்த அனுஜ் சேட்டன் சரஸ்வதி கேத்ரியா என்கிற போலி சாமியார் ஒருவர், அந்த பகுதியில் சற்று தெரிந்த முகமாக இருக்கிறார்.
இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு அங்குள்ள மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு உள்ளார். திருமணத்திற்கு பிறகு, சாமியாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.
இப்படியாக, இவர்களது விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு அங்குள்ள பரேலியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை, போலி சாமியார் அனுஜ் திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த பெண்ணுடன் சில நாட்கள் உல்லாசமாக வாழ்ந்து விட்டு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனாலும், கடந்த 2014 ஆம் ஆண்டு சற்றும் மனம் தளராத போலி சாமியார் அனுஜ், 3 வதாக அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
அந்த 3 வது மனைவியோடு அந்த சாமியார் வாழ்ந்து வந்த நிலையில், தனது 3 வது மனைவியின் உறவுக்கார பெண்ணை, அந்த சாமியார் 4 வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த பெண்ணுக்கு இந்த சாமியார் இதற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்து அந்த பெண், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டில் போலி சாமியார் அனுஜ், 5 வதாக மேலும் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அந்த 5 வது பெண்ணை அனுஜ் துன்புறுத்தி வந்ததால், அந்த மனைவியும் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், அனுஜ்க்கும் அவரின் 5 வது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக, அனுஜ் 6 வதாக திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அவரின் மற்ற மனைவிகளுக்கும் விவபரம் தெரிய வந்த நிலையில், அவர்களும் “கணவன் அனுஜ் முறையாக விவகாரத்து பெறாமல் எங்களை திருமணம் செய்துகொண்டதாக” அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
முக்கியமாக, பெண்களை வரிசையாக திருமணம் செய்துகொண்டு வந்த இந்த சாமியார், தனது மனைவிகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு, அவர்களை விபச்சாரத்தில் தள்ளப்படுவதாகவும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனைவியுடன், அந்த சாமியார் தொடர்ந்து சண்டைப் போட்டு வந்ததும் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட அவரின் மனைவிகள் அளித்த புகாரில் தெரிய வந்தது.
குறிப்பாக, இந்த போலி சாமியாரின் சித்திரவதை தாங்க முடியாமல் தான், இவரின் 4 வது மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்றும், அவரது 3 வது மனைவி குற்றச்சாட்டி உள்ளார்.
அத்துடன், அங்குள்ள ஷாஜகான்பூரின் நிகோஹி காவல் நிலையப் பகுதியில் “மா காமக்கியா பஞ்சரே பாபா கல்யாண் சேவா அறக்கட்டளை” என்கிற பெயரில், பாபா அனுஜ் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்ததும் தற்போது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பாபா அனுஜ் திருமண தகவல் இணைய தளத்தில் தனது சுயவிவரத்தை லக்கி பாண்டே என்கிற பெயரில் பராமரித்து வந்ததும், கிட்டதட்ட 32 சிறுமிகளுடன் அரட்டை அடித்து வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும், போலி சாமியார் அனுஜ், தனது தம்பியின் மனைவியையையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதும், இந்த விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருதால், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.