“என் திருமணத்திற்கு மணமகளைக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று, ஒருவர் போலீசாரிடம் மனு அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மொஹல்லா பகுதியைச் சேர்ந்த 26 வயதான மன்சூரி என்பவர், மற்ற மனிதர்களைப் போல் இயல்பால் இயல்பில் சற்று உயரம் குறைந்து காணப்படுகிறார்.
26 வயதாகும் மன்சூரி உயரம் வெறும் 3 அடி மற்றும் 2 அங்குலம் மட்டுமே ஆகும்.
அவர், மிகவும் உயரம் குறைவாக இருப்பதால், அதையே காரணம் காட்டி, அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால், அவருக்குத் திருமணம் ஆகாமல் பல வருடங்கள் கடந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஆனாலும், விட முயற்சியுடன், அவர் பல இடங்களிலும் களத்தில் இறங்கி பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால், கடைசி வரை திருமணம் கை கூடவே இல்லை.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பித் தவித்து வந்தார்.
இந்த நிலையில், திடீரென்று ஒரு தீர்மானத்திற்கு வந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தை நோக்கிப் புகார் மனு உடன் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, அந்த காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் இருந்தார். அவரை நேரில் சந்தித்து தனது பிரச்சினையை எடுத்துக்கூறிய மன்சூரி, “எனக்கான பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு" கேட்டுக்கொண்டார்.
அத்துடன், கைப்பட கொண்டு சென்ற புகார் மனுவையும் அவர் காவல் ஆய்வாளரிடம் கொடுத்தார்.
மன்சூரின் கதையை முழுவதுமாக கேட்ட அந்த பெண் ஆய்வாளர், அந்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, “நிச்சயம் உங்களது பிரச்சனைக்கு நான் உதவி செய்கிறேன்” என்று, உறுதி அளித்தார்.
முக்கியமாக, இந்த மன்சூர் தான், ஏற்கனவே “எனக்குத் திருமணத்திற்கு பொண் கிடைக்கவில்லை என்று, அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பல அரசு அலுவலர்களுக்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்ததும்” தெரிய வந்துள்ளது.
மேலும், ரம்ஜான் பண்டிகை இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால், அந்த பண்டிகை வருவதற்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மன்சூர் தற்போது இறங்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் திருமணம் முடிந்த கையோடு, மனைவி உடன் தேனிலவுக்கு கோவா, மணாலி, சிம்லா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல அவர் முடிவு செய்துள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.