பொது மேடையிலேயே பாஜக எம்எல்ஏவை விவசாயி ஒருவர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பாஜக - சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

தற்போது, அந்த மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு நேரில் சென்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி அன்ற, அங்கு பொது கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, அந்த பொது கூட்ட மேடையில், பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது, மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா, மேடையில் அமர்ந்திருந்தார்.

அந்த நேரம் பார்த்து, மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு விவசாயி, எழுந்து மேடைக்கு வந்து பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவை, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில், கண்ணத்தில் அறைந்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா, நிலைகுலைந்துப்போன நிலையில், அந்த மேடையில் இருந்த பாஜகவைச் சேர்ந்த பிற தலைவர்கள், அந்த விவசாயியை தடுத்து, அங்கிருந்து மேடைக்கு கீழே அழைத்துச் சென்றனர். இதனால், அந்த மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மற்றும் அவரை அடித்தாக கூறப்படும் விவசாயி பெயர் சத்ரபால் என்று செய்தி வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சிய தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக் கூட்டத்தில், விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்தார். இந்த அறை எம்எல்ஏவுக்கானது அல்ல, அதற்கு மாறாக பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கைகள், மோசமான ஆட்சி மற்றும் எதேச்சதிகாரத்துக்கான அறை” என்று, டிவீட் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா தற்போது ஒரு புதிய விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், “அந்த விவசாயி என்னை அறையவில்லை என்றும், செல்லமாகவே தன்னை கண்ணத்தில் அடித்தார்” என்றும், பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா விளக்கம் அளித்து உள்ளார். இச்சம்பவம், இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.