“உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெல்லும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்” என்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்ட நிலையில், தற்போது வாக்குபதிவு நடந்து முடிந்திருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் தான், தற்போது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் அதி தீவிரமாக அரசியல் காய்களை நகர்த்தி, கடந்த சில மாதங்களா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.
அந்த வகையில், கிட்டதட்ட 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளன. எனினும், அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியான பாஜகவும், முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டி களப்பணி ஆற்றியது.
இந்த சூழலில் தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
அந்த வகையில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாகவும், 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும், 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தான், 2022 சட்டமன்றத் தேர்தலலிங்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதன்படி, “உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்” என்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
அந்த வகையில், இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் “பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப்
அதன் படி, “பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களை கைப்பற்றும்” என்றும், இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநில தேர்தல் நிலவரம் குறித்து, டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில், “பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும்,
ஆம் ஆத்மி ஒரு இடங்களிலும் வெற்றி பெறும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் தேர்தல் நிலவரம் குறித்து, ரீபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், “பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 262 முதல் 277 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்றும், சமாஜ்வாதி கட்சி 119 முதல் 134 இடங்களை பிடித்து 2 வது இடத்திற்கு வரும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சியானது 7 முதல் 15 இடங்களில் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியானது 3 முதல் 8 இடங்களை பிடிக்கும் என்றும், கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தகக்து.