இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 ம் தேதி, தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தேசிய கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் பரவலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் கொடி அணிவகுப்பு மரியாதை செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்படும் நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே இந்த ஆண்டு கலந்து கொளள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக நான்காயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி 74-வது சுதந்திரத்தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், ``நாம் அசாதாரணமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பிரகாசமான எதிர்காலமாகிய குழந்தைகளை நான் என் முன்னால் இன்று காண இயலவில்லை. ஏன்? ஏனென்றால் கரோனா ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி விட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என லட்சக்கணக்கான கொரோனா வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

சேவையே சிறந்த மதம் என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்றி வரும் கொரோனா முன்களப் பணியாளர்களை நான் வணங்குகிறேன். முழுமையான அர்ப்பணிப்புடன் அவர்கள் அன்னை இந்தியாவின் குழந்தைகளுக்கு சேவை புரிகின்றனர்" என்று கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே மூழ்கி கிடந்திருந்த போது, அன்றைய தினம், உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் அன்றைய தினம் இரவு, 16 வயது பெண், துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்தச் சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்கம் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பப்ராலா பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்துள்ளார்.

தனது கோரிக்கைகளில், சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊழல், மரங்களை வெட்டுவது குறித்து எழுதப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களின்போது பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதியவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். முதியவர்களை அவர்களது பிள்ளைகளே ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகின்றனர் என்று தனது கடிதத்தில் சிறுமி எழுதிவைத்துள்ளார்.

இது தங்கள் மகளின் கடைசி ஆசையாக இருந்துள்ளது என்பதால், இந்த கடிதத்தை பிரதமரிடம் சேரும்படி உதவ வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டிருக்கிறனர்.

சிறுமியின் சமூக அக்கறை பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தாலும், அவரின் தற்கொலை மிகப்பெரிய வேதனையையே தருகிறது என பலரும் வருந்துகின்றனர்.

சிறுமியின் அப்பா அடிப்படையில் விவசாயி என சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் என்றபோதிலும், மகளின் கடைசி ஆசைப்படி, அந்த கடிதத்தை எப்படியாவது பிரதமரிடம் சேர்த்துவிடுவோம் என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.