இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவம்பர் 19, 1917 அன்று பிறந்த இந்திரா காந்தி, 1966 முதல் 1977 வரை பிரதமராகவும் பின்னர் 1980 முதல் 1984’இல் படுகொலை செய்யப்படும் வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றியுள்ளார்.
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள் இவர். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு என்பதுதான். பின்னர் ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.
1977-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-ல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
அவரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் தொண்டர்கள் அனைவரும் இந்திரா காந்தியின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜிக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம் என்று பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
``முழு நாடும் அவரது ஈர்க்கக்கூடிய தலைமைக்கு உதாரணம் தருகிறது. ஆனால் நான் அவரை எப்போதும் என் அன்பான பாட்டி என்று நினைவில் வைத்திருக்கிறேன். அவரது போதனைகள் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கின்றன” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார் . ராகுல் காந்தி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல, காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தியை தொலைநோக்குத் தலைவர் என்று பாராட்டியுள்ளது. ``ஒரு தொலைநோக்கு பார்வையாளர், ஒரு உண்மையான தலைவர் மற்றும் எங்கள் தாய்நாட்டின் ஒரு பெரிய மகளான இந்திரா காந்தி எங்கள் குடிமக்களுக்கு ஒரு பிரதமரை விட அதிகமாக இருந்தார். அவர்கள் பெருமை மற்றும் செழிப்புக்கான தேடலில் புத்துயிர் அளிக்கும் பலமாக இருந்தனர். இன்று, நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் இந்தியாவின் இந்திராவுக்கு அஞ்சலி செலுத்துங்கள்" என்று காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ரன்தீப் சுர்ஜீவாலாவும் இந்திரா காந்தியின் 103’வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“உலகெங்கிலும் இரும்பு பெண்மணி என்று அறியப்படுபவர். உறுதியும், தைரியமும், அற்புதமான திறமையும் கொண்டவர். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி. அவரது பிறந்த ஆண்டு விழாவில் அவருக்கு எனது அஞ்சலி.” என ஆவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள ஏழைகளுக்கு போர்வைகளை விநியோகித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது.