ரூபாய் நோட்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என்று கோரி, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா பல பண்பாடுகள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதுடன், பல்வேறு இன மக்களை இணைக்கும் நாடாகவும் திகழ்ந்து வருகிறது.

அதே போல், உலகில் உள்ள பல்வேறு நாகரிகங்களை உருவாக்க உதவிய பண்டைய பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளின் உண்மையான சாரத்தை ஊக்குவிக்கவும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில்தான், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு காலத்தில் அச்சிடப்பட்ட 6 ஆம் ஜார்ஜ் மன்னரின் படம் அச்சிடப்பட்ட ரூபாய் தாள்களையே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வந்தது.

பின்னர், 1949 ஆம் ஆண்டு முதல் புதிய ரூபாய் நோட்டுகளில் மன்னர் ஜார்ஜ் படத்துக்கு பதிலாக, மகாத்துமா காந்தியின் படத்தை வைக்க அப்போதே பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதற்கு பதிலாக சாரநாத்தில் உள்ள நான்முகச் சிங்கத்தின் படத்தை அச்சிட இறுதியில் முடிவு செய்யப்பட்டதாகவும், ரிசர்வ் வங்கியின் வரலாற்று பக்கத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

பின்னர், 1953 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியில் எழுதப்பட்ட மதிப்பு, ரூபாய் தாள்களில் பிரதானமான இடத்தைப் பெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 1969 ஆம் ஆண்டில் காந்தியின் நூற்றாண்டு விழா வந்தபோது தான், அவரது படம் முதல் முறையாக இந்திய ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டது.

அதன்படி, சேவாகிராம் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருப்பது போன்ற படம் இந்திய ரூபாய் நோட்டில் இடம் பெற்று உள்ளது.

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத்தில் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபிறகு, ரூபாய் தாள்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி, அதன் பின் அச்சிடப்பட்டவையே இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன் அச்சான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் வங்கிகளால் திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டாலும், பிற மதிப்பிலான தாள்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், “ரூபாய் நோட்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும்” என்று, தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நித்தியானந்தம் கோரிக்கை விடுத்து உள்ளார்.

அதாவது, கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டுக்களில் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்று, டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் அளித்த பரிந்துரையின் பேரில், ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த செய்தியை ஆர்.பி.ஐ.யும் முன்னதாக மறுத்திருந்த நிலையில், இது பேசும் பொருளாகவே மாறியது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நித்தியானந்தம் என்பவர், தற்போது இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய கோரிக்கை ஒன்றை அளித்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள கோரிக்கையில், “சுதந்திரத்திற்காக போராடிய மற்ற தலைவர்களின் புகைபப்டத்தையும் அச்சிட வேண்டும் என வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட்டு, ஆதாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கிக்கு 149 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை” ரிசர்வ் வங்கிக்கு நித்யானந்தம் தற்போது அனுப்பி வைத்து உள்ளார்.

அந்த பரிந்துரையில், “தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களான பாரதியார், சுப்ரமணியம் சிவா, வ.உ.சி, தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகியோர் படங்களை ரூபாய் நோட்டுக்களில் அச்சிடும் படி ஆர்.பி.ஐக்கு, நித்யானந்தம் தற்போது கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி, நித்யானந்தத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இது குறித்து பதில் கடிதமும் தற்போது அனுப்பி வைத்து உள்ளது.

மேலும், “இது தொடர்பாக, ஆலோசனை நடத்தியே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றும், ரிசர்வ் வங்கி அந்த பதில் கடிதத்தில் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.