தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை.
இதையடுத்து, செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா என மத்திய அரசுக்கு எதிராக கண்டங்கள் எழுந்து வருகின்றன. “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்தியாவின் பண்முகத்தன்மையை பாழ்படுத்தி ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே மத்திய பாஜக அரசு கொள்கையாகக் கொண்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ், தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம். இதற்கு துணை போகும் தமிழக அரசின் அவலங்களை அம்பலப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்றைய தினம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் கூறினார். இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ததால், இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் புதிய அறிவிப்பாணையில் உள்ளன.