கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மாதத்திலிருந்து, இந்தியாவின் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இப்போதும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்றாலும், மருத்துவ அவசரத்தை விட பொருளாதார இழப்பு பெரிதாகியிருக்கிறது.
ஆகையால் மத்திய-மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, இந்தியாவின் மிகமுக்கியமான சுற்றுலா தளமான தாஜ்மகால் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்ர் 21-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
தாஜ்மகாலில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும். தாஜ்மகால் செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாததால் சுற்றுலாத் துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது என சொல்லப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க கோரி, சுற்றுலா தொழிலையே நம்பி இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள், தாஸ்மஹால் அறிவிப்புக்கு முன்னராகவே அறிவிப்பை வெளியிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வேன், மற்றும் வாடகை கார்களை வைத்திருக்கும் ஓட்டுனர்கள் , சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தளங்களில் சிறிய கடை வைத்திருப்பவர்கள் ,குடிசை தொழிலாக ஹோம் மேடு சாக்லேட் செய்பவர்கள் என சுற்றுலா பயணிகளையே நம்பி 1000த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டதால் இந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.
சுற்றுலா பயணிகள் இல்லாததால் வாடகை கார்கள் இயக்காமல், வாகனங்களில் உள்ள பேட்டரி பழுதாகி விட்டதாக வாடகை கார் ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஹோம்மேடு சாக்கலேட் தயாரிப்போரின் நிலையோ மிக மோசம். கடந்த 5 மாதத்தில் மட்டும் 20 டன் ஹோம்மேடு சாக்கலேட் வீணாகி போனதாக வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கட்டட வேலைக்கு செல்வதாக கூறும் வழிகாட்டிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றும் ஆதங்கத்துடன தெரிவிக்கின்றனர்.
எனவே, வரும் நாட்களில் சுற்றுலா யணிகளை குறைந்த அளவிலாது அனுமதிக்க வேண்டும் என்பதே சுற்றுலாவை நம்பி வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. கொடைக்கானல் மட்டுமன்றி, பல்வேறு சுற்றுலாத் தளங்களை சேர்ந்தவர்களும், இப்படியான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் வைத்து வருகின்றனர்.