பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தினமும் புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஜூன் மாதல் 14-ம் தேதி, கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார். நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்துள்ளார்.

பாட்னா காவல்துறை பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார். சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, சுஷாந்த் விவகாரம் தொடர்பாக மும்பை, பீகார் ஆகிய இரு மாநில காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

சுசாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள மும்பை காவல்துறை உயர் அதிகாரி பரம்பீர் சிங், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு பைபோலார் பிரச்னை இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தது அவரின் மருத்துவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவரது மரணத்துக்கு எந்தச் சூழ்நிலை வழிவகுத்திருக்கும் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.

சுஷாந்தின் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பீகார் போலீஸ் கூறியுள்ளது தவறானது. எங்கள் விசாரணையின் தொடக்கத்தில் அவரது கணக்கில் ரூ.18 கோடி இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். தற்போது அதில் ரூ 4.5 கோடிதான் உள்ளது. சுஷாந்தின் கணக்கிலிருந்து ரியாவின் கணக்குக்கு நேரடி பரிமாற்றம் தொடர்பான எந்தத் தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. நாங்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

அதேபோல், கூகுள் இணையத்தளத்தில் இதுவரை தன்னுடைய பெயரில் என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ள என்பதைப் பலமுறை அவர் தேடியுள்ளார். மேலும், வலியில்லா மரணம் (painless death), இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு (bipolar disorder), மனச்சிதைவு (schizophrenia)ஆகிய வார்த்தைகளையும் அவர் கூகுளில் தேடியுள்ளார். தொழில் போட்டி, நிதி பரிவர்த்தனைகள், ஆரோக்கியம் போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றன. அவரது லேப்டாப், கைபேசி ஆகியவற்றைத் தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.