“லகிம்பூர் வன்முறையில் யார் மீதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்? யார் மீதெல்லாம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் மகனை கைது செய்ய முயற்சிப்பதாக போலீஸ் ஐஜி லட்சுமி சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிய மிக கடுமையான விமசர்னத்திற்குப் பிறகே, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, “லகிம்பூர் கேரி வன்முறையில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு நபர் ஆணையம் அமைத்து” உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், லகிம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதன் படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “லகிம்பூர் வன்முறையில் யார் மீதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது? யார் மீதெல்லாம் எஃப்ஐஆரான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது? யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணையின் தற்போதைய நிலை என்ன? என்பதை நாளைக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று, உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி, தலைமை நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உள்ளார்.
இந்த நிலையில் தான், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப் பிரதேச போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தேடி வருவதாகவும், லகிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக அவரை கைது செய்ய முயற்சிப்பதாகவும் உத்தரப் பிரதேச போலீஸ் ஐஜி லட்சுமி சிங் கூறியுள்ளார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தேடி வருவதாக காவல்துறையின் உயர் அதிகாரி கூறியுள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர் மறையான கருத்துக்களை கூறிவருகின்றனர்.