இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் 5 பேர் காவல் துறையின் விசாரணையின் போது உயிரிழந்து உள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் லாக்கப் டெத் மரணங்கள் முன்பை விட தற்போது அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருந்தன. தற்போது, அதனை மெய்பிக்கும் வகையில், மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. முக்கியமாக, அவர்கள் இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலான இந்தியப் பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகச் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் இது போன்று நிகழும் லாக்கப் டெத் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டு உள்ள அதிர்ச்சித் தகவலில், “கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும், இந்தியாவில் தினமும் 5 பேர் காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்ததாக” கூறி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதனையடுத்து, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 30 வரை காவல் துறை விசாரணையில் 1,697 பேர் உயிரிழந்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இதில் 1,584 பேர் நீதிமன்ற காவலின் போது உயிர் இழந்திருக்கிறார்கள் என்றும், 113 பேர் காவல் துறை கஸ்டடியிலும் உயிரிழந்து உள்ளனர்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “நாட்டில் அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற காவலின் போது 400 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 143 பேரும், அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் 115 பேரும் இது போன்று உயிரிழந்து உள்ளனர். 4 வது இடத்தில் பீகார் மாநிலத்தில் 105 பேரும், 5 வது இடத்தில் பஞ்சாப்பில் 93 பேரும், 6 வது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 91 பேரும் லாக்கப்பில் இருக்கும் போதே உயிரிழந்து உள்ளனர்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், “காவல்துறை விசாரணையைப் பொறுத்த வரை, அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 14 பேரும், தமிழகம் மற்றும் குஜராத்தில் தலா 12 பேரும் உயிரிழந்து உள்ளனர்” என்று, மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.