கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா வங்கியில் வாங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் தப்பியோடி லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பாக தரவேண்டிய கடன்களுக்காக, அந்நிறுவனத்தின் விளம்பரதாரராக இருக்கும் யுனைடெட் ப்ரீவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (யுபிஎச்எல்) நிறுவனத்தை பொறுப்பாக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்றது யுபிஎச்எல்.
இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், புதிய திருப்பமாக வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கின் குறிப்பிட்ட சில ஆவணங்கள் தற்போது மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணையின் போது இது தெரியவந்த நிலையில், மனுதாரர் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் யு.பி.எச்.எல். நிறுவனம், ரூ.14,518 கோடி மதிப்புள்ள கடன் நிலுவையை செலுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மொத்தம் 14 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு இத்தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திவால் சட்டங்களின் நோக்கம், நிறுவனங்கள் செயல்படும் தன்மையுள்ளதாகவும், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று யுபிஎச்எல் சார்பில் கூறப்பட்டது.
இந்நிறுவனம் சார்பில் தற்போது விடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு கடன் திரும்ப செலுத்துதல் உத்தரவாதம், கடந்த மார்ச் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் டாலர் பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுபோல பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவை மல்லையா மீறிவிட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2017ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி விஜய் மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த முந்தைய தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.