தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில், வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(ஓபிசி), வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தன.
அதில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இடங்களை ஒதுக்கும்போது, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என திமுக தொடர்ந்திருந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தெரிவித்தது. இந்த தீர்ப்பில், `அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இடங்களை அளிக்க, தமிழக அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை, மத்திய அரசு அமைக்கவேண்டும். இதன் மூலம், அடுத்த கல்வி ஆண்டில் இடங்களை ஒதுக்கலாம்' என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்ததுது.
இந்நிலையில் மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவெடுக்கவும், அடுத்த கல்வியாண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், இடஒதுக்கீட்டை இறுதி செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி மற்றும் தமிழக அரசின் அதிகாரி அடங்கிய குழுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியது தேவையற்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யோகேஷ் கண்ணாவும், வி.கிரியும் ஆஜராகினர்.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இட ஒதுக்கீடு தொடர்பாக இறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு தொடர வேண்டும் என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்.
மலை கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு வழங்கி வரும் சிறப்பு சலுகைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ உயர் படிப்பில், ``அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம்" என அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், ``இடஒதுக்கீடு வழங்குவதற்கோ ரத்து செய்வதற்கோ இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை" எனவும், ``முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும்" எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம், என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்" என கூறியுள்ளார்.