போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக (சப் இன்ஸ்பெக்டராக) பணியாற்றி வந்தவர் தான் இந்த மதுசூதன் ராவ். இவர், கடந்த குறிப்பிட்ட அந்த காவல் நிலையத்தில், பணியாற்றும் போது மிகவும் பரபரப்பாக இருந்து பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
காவல் அதிகாரி மதுசூதன் ராவ், பரபரப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கும் போதே, அவர் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. அதன் படி மதுசூதன் ராவ், கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
அதே நேரத்தில், மதுசூதன் ராவுக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இருந்தனர். இதில், 3 பிள்ளைகளுக்கும் அவர் முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மதுசூதன் ராவ், தனது மனைவி மற்றும் மகனுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓய்வுக்குப் பிறகு அவருக்கு ஓய்வூதியத் தொகையாக மாதம் மாதம் அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் பணம் வந்துகொண்டு இருக்கிறது. தனது பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் இருந்து வந்த மதுசூதன் ராவ், மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், மதுசூதனின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதன் காரணமாக, இன்னும் அதிக துக்கத்தில் இருந்த மதுசூதன் ராவ், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார்.
இதனை அவரது மகன் கண்டித்து உள்ளார். இதனால், தந்தை - மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துகொண்டே இருந்தது. இப்படியாக, தந்தை - மகன் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மகன், சில மாதங்களுக்கு முன்பு தந்தை மதுசூதன் ராவை, வீட்டில் இருந்து வெளியே துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இன்னும் மன உளைச்சலுக்கு ஆளான மதுசூதன் ராவ், வீட்டுக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள சாலை ஓரம் படுத்துத் தூங்கி வந்தார். தற்போது, அவருக்கு வயது அதிகம் ஆனதால் வேலைக்கு சென்று உழைக்க உடம்பில் தெம்பு இல்லாமல், பழைய பொருட்களை வீதி வீதியாக சென்று சேகரித்து அதை விற்று அன்றாடம் சாப்பிட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும், அவரது வங்கி கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் பணம் இருப்பு உள்ளது என்றும், ஆனால் மகன் வீட்டில் இருந்து வெளியேற்றியதால் பிச்சைக்காரர் போல் மதுசூதனன் வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
முன்பு ஒரு காலத்தில் போலீஸ் சீருடையில் சிந்தாமணி வீதிகளில் கம்பீரமாக ராஜநடை போட்ட மதுசூதன் ராவ், இன்று அதே பகுதியில் குப்பை கழிவுகளை சேகரித்து சாக்கு மூட்டையுடன் கந்தலான சட்டை அணிந்து தாடியுடன் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருவதைப் பார்க்கும் போது, அந்த பகுதி மக்களுக்கு கடும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவரது இந்த நிலையை பார்த்து, அந்த பகுதியின் காவல் துறையினர் மிகுந்த மன வேதனை அடைவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், இந்த சம்பவம் பற்றி சிக்பள்ளாப்பூர் காவல் உயர் அதிகாரி ஜி.கே.மிதுன்குமாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர், மதுசூதன்ராவுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க சிந்தாமணி டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அந்த பகுதி போலீசார், மதுசூதன் ராவை சந்தித்து அவருக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளனர். அதற்கு அவரோ, “எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்றும், எனக்கு சொந்தம் என்று யாரும் வேண்டாம் என்றும், எனக்கு இந்த தெரு வாழ்க்கையே போதும் என்றும், இதுவே எனக்கு நிம்மதியாக இருக்கிறது” என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.